தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுதியை நோயாளிகளின் உறவினர் தங்குமிடமாக மாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுதியை நோயாளிகளின் உறவினர் தங்குமிடமாக மாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

சென்னை, சேப்பாக்கத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விடுயை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் இடமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றியுள்ளார்.

சென்னை

சென்னை, சேப்பாக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 எம்.எல்.ஏக்களுக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்படும். இரண்டு படுக்கையறை, சமையலறை, வரவேற்பறை, சாப்பாட்டு அறை என்று எல்லா வசதிகளும் இந்த குடியிருப்பில் அமைந்திருக்கும். சொந்த வீடுகளில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் இதை விருந்தினர் இல்லங்களாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனக்கு ஒதுக்கப்பட்ட எம்.எல்.ஏ. விடுதியை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளின் உறவினர்கள் தங்கிச்செல்லும் இடமாக மாற்றி இருக்கிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு கிருஷ்ணகிரியை சேர்ந்த கூலி தொழிலாளியான சரவணன் - சத்யஜோதி தம்பதியினரின் 10 வயது மகன் சூரியகுமார் விளையாடிக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த நெருப்பில் சானிடைசர் விழுந்ததில் சூரியகுமாரின் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. சூரியகுமாருக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சேலம் குமாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் சிறுவனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவன் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கே சிறுநீரக செயலிழப்பு மற்றும் ரத்தகொதிப்பு, வலிப்பு நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு (2022) சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இரண்டு கைகளுக்கும் ஒட்டுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சீராக்கப்பட்டது.

தீக்காயத்தால் ஏற்பட்ட வடுக்கள் பிளாஸ்டி சர்ஜரி மூலம் சரி செய்யப்பட்டது. இதற்காக ஒரு வருடமாக அந்த சிறுவன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றார். இந்த கால கட்டத்தில் சரவணன் - சத்ய ஜோதி குடும்பத்தினரை சேப்பாக்கத்தில் உள்ள தனது எம்.எல்.ஏ., விடுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தங்க வைத்து குடும்ப செலவுகளை ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில், கடந்த 13-ந்தேதி பூரண உடல்நலம் பெற்று சிறுவன் சூரியகுமார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, சிறுவன் சூரியகுமாரும், அவரது பெற்றோரும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இதேபோல, சுமார் 1½ ஆண்டுகளுக்கு முன்பு தென்காசியை சேர்ந்த ஏழைத் தொழிலாளியின் குழந்தை வினோத நோயால் பாதிக்கப்பட்டு எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 6 மாத காலம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற அந்த குழந்தையின் பெற்றோரை தனது எம்.எல்.ஏ. விடுதியில் இலவசமாக தங்க வைத்து வீட்டு உபயோக பொருட்களை வழங்கி குடும்ப செலவுகளையும் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தான் நடத்திய 'கலைஞர் நினைவு மாரத்தான்' போட்டி மூலம் ரூ.1 கோடி நிதி திரண்டது. அந்த நிதி முழுவதையும் எழும்பூர் குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கி, அரசு செயலாளர் தலைமையில் தனி அறக்கட்டளை ஒன்றை தொடங்கினார். அந்த நிதியில் கிடைக்கும் வருமானம் அங்குள்ள ஏழை குழந்தைகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.


Next Story