அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டில் சிக்கிய விவகாரம் - இன்ஜினியர்கள் அதிரடி சஸ்பெண்ட்


அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டில்  சிக்கிய விவகாரம் - இன்ஜினியர்கள் அதிரடி சஸ்பெண்ட்
x

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் லிப்டுகளை சரியாக பராமரிக்காத என்ஜினீயர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

நிகழ்ச்சி நிறைவு பெற்றதை அடுத்து 3-வது தளத்திலிருந்து தரை தளத்திற்கு லிப்டின் மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று லிப்டின் இயக்கம் தடைபட்டது.

இதனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் 'ஐட்ரீம்' மூர்த்தி, சுகாதார துறை செயலாளர் செந்தில் குமார் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் சாந்தி மலர் ஆகியோர் லிப்டில் சிக்கி கொண்டனர்.

இதனையடுத்து, ஆபத்து கால கதவின் வழியே, சிக்கிகொண்ட அனைவரையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 10 நிமிடங்கள் போராட்டத்திற்கு பின் லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர் மற்றும் உடனிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் லிப்டுகளை சரியாக பராமரிக்காத என்ஜினீயர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உதவி செயற்பொறியாளர் சசிந்தரன், உதவி என்ஜினீயர் கலைவாணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story