சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
சென்னை கிண்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியின் கட்டிட பணிகள் மற்றும் தேசிய முதியோர்நல ஆஸ்பத்திரி கட்டிடத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.230 கோடி செலவில், 5 லட்சத்து 53 ஆயிரத்து 582 சதுர அடியில் இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியை முன்கூட்டியே, அதாவது வரும் ஜூன் மாதத்திலேயே திறக்க தயாராக கட்டிட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அதே போன்று, இதே வளாகத்தில் ரூ.92.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் முதியோர்நல ஆஸ்பத்திரியின் கட்டுமான பணிகள் வெகு சில நாட்களில் முடிவடைய உள்ளன.
எனவே நானும், சுகாதாரத்துறையின் செயலாளரும் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து இந்த ஆஸ்பத்திரியை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு அழைக்க இருக்கிறோம்.
தமிழக முதல்-அமைச்சரும், மத்திய மந்திரியும் சேர்ந்து இந்த ஆஸ்பத்திரியை தொடங்கிவைக்கும் நிலையில், இந்தியாவிலேயே வயது மூத்தோருக்காக தொடங்கப்பட்ட முதல் ஆஸ்பத்திரியாக இது இருக்கும்.
108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் புதிதாக அனைத்து உயிர் காக்கும் வசதிகளையும் கொண்ட 75 ஆம்புலன்சுகளை ரூ.24 கோடி மதிப்பீட்டில் வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் அடுத்த வாரம் ஒப்படைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சுகாதாரத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவ கல்வி இயக்குனர் (பொ) டாக்டர் ரா.சாந்திமலர், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் விஸ்வநாத், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.