பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்
மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என்று பொங்கலூர் அருகே மருத்துவ முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
மருத்துவ முகாம்
பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் வே.கள்ளிபாளையம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் வே.கள்ளிபாளையம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் நடைபெறும் ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தை நல மருத்துவர் உள்ளிட்ட 15 பேர் குழு கொண்ட மருத்துவர் குழுக்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறந்த திட்டமாகும்.
இந்த முகாமில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய்களில் பாதிக்கக்கட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு மற்றும் இயன்முறை மருத்துவம் நோய்த் தடுப்பு பராமரிப்பு செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்னுயிர் காப்போம் திட்டம்
சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் விபத்து நடந்த உடன் எவ்வித தாமதமும் இல்லாமல் விபத்தில் சிக்கியவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும், அவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் 48 மணிநேரத்தை முக்கியமாக கருதி இத்திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற மருத்துவ முகாம்களை பயன்படுத்தி தங்களது உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.