முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு: ஈரோட்டில் 500 பேருக்கு ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு: ஈரோட்டில் 500 பேருக்கு ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
x

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு விழாவையொட்டி ஈரோட்டில் 500 பேருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு விழாவையொட்டி ஈரோட்டில் 500 பேருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈடில்லா ஆட்சி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ளன. இதையொட்டி "தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" என்ற தலைப்பில் நேற்று 2-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் அந்தியூர் ப.செல்வராஜ், அ.கணேசமூர்த்தி, மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ரூ.60 லட்சம்

ஈரோடு தாலுகாவுக்கு உள்பட்ட 220 பேருக்கு ரூ.26 லட்சத்து 40 ஆயிரம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதுபோல் மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உள்பட்ட 50 பேர், கொடுமுடி தாலுகாவுக்கு உள்பட்ட 30 பேர், பெருந்துறை தாலுகாவுக்கு உள்பட்ட 50 பேர், பவானி தாலுகாவுக்கு உள்பட்ட40 பேர், அந்தியூர் தாலுகாவுக்கு உள்பட்ட 50 பேர், கோபி தாலுகாவுக்கு உள்பட்ட 40 பேர், நம்பியூர் தாலுகாவுக்கு உள்பட்ட 20 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 500 பேருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கி பேசினார்.

சாதனைகள் தொடரும்

அப்போது அவர் கூறும்போது, 'தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 3-வது ஆண்டினை நோக்கி வெற்றியுடன் அடிஎடுத்து வைத்து உள்ளது. 2 ஆண்டுகள் சாதனைகளை விஞ்சும் வகையில் 3-ம் ஆண்டு சாதனைகள் தொடரும்' என்றார்.

இந்த விழாவில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துறை கலெக்டர் குமரன், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) பாலசுப்பிரமணியன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story