தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில்வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கைஅமைச்சர் மதிவேந்தன் பேட்டி


தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில்வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கைஅமைச்சர் மதிவேந்தன் பேட்டி
x
சேலம்

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

வன உயிரியல் பூங்கா

சேலம் குரும்பப்பட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவுக்கு நேற்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வந்தார். பின்னர் அவர் உயிரியல் பூங்காவில் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது விலங்களுக்கு முறையாக உணவு வழங்கி பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு, பூங்காவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சேலம் மாவட்ட மக்களுக்கு சிறந்த சுற்றுலா தலமாக குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா விளங்கி வருகிறது. 31 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பூங்காவில் 24 வகையிலான 200-க்கும் மேற்பட்ட பல்வேறு பறவைகள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன.

தரம் உயர்த்தப்படும்

பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. வருங்காலங்களில் 2-ம் நிலை வன உயிரியல் பூங்காவாக தரம் உயர்த்தப்படும். இந்த பூங்காவை மேம்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சிறிய பூங்காக்களை நடுத்தர பூங்காவாக தரம் உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி தமிழக அரசு மூலம் என்ன திட்டம் செயல்படுத்தலாம்? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

வன உயிரினங்கள் மர்மமான முறையில் இறப்பதை தடுக்கவும், வன விலங்குகள் நகரப்பகுதிக்கு வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வனப்பரப்பை அதிகரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். தற்போது தமிழகத்தில் 23.7 சதவீதமாக உள்ள வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல் கட்டமாக திண்டுக்கல்லில் 117 ஏக்கர் பரப்பளவில் 6 லட்சத்து 31 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மரக்கன்றுகள் நட்டார்

முன்னதாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் அமைச்சர் மதிவேந்தன் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் அஸ்தம்பட்டியில் உள்ள சந்தன மரக்கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ள செம்மரங்களை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி, சேலம் சரக வன அலுவலர் (பொறுப்பு) ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story