தமிழகத்தில் 5 மருந்து கிடங்குகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு நாமக்கல்லில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


தமிழகத்தில்  5 மருந்து கிடங்குகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு  நாமக்கல்லில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 5 மருந்து கிடங்குகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு நாமக்கல்லில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நாமக்கல்

தமிழகத்தில் 5 மருந்து கிடங்குகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல்லில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திறப்பு விழா

நாமக்கல் அருகே வினைதீர்த்தபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொல்லிமலை வட்டார அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க பொன்னுசாமி எம்.எல்.ஏ.வும், டாக்டர்கள் குடியிருப்பு கட்டிடம் கட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதற்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் பின்னர் 4 அல்லது 5 மாதத்தில் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல்லில் சித்த மருத்துவக்கல்லூரி அமைக்க ஏதுவாக, 50 படுக்கைகளுடன் புதிய சித்தா ஆஸ்பத்திரி அமைக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நலவாழ்வு மையங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் நகர்புற நல வாழ்வு மையங்கள் அமைய உள்ளது. மத்திய அரசின் கலந்தாய்வு முடிந்த பிறகு, தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் அறிவிக்கப்படும். கடந்த 20 நாட்களுக்கு முன்பு எச்1 என் 1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு நாள் ஒன்றுக்கு 300 முதல் 350 வரை இருந்தது. தற்போது கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 20-க்கும் குறைவாக உள்ளது.

மருத்துவத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 237 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. 1,021 டாக்டர்கள் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

5 மருந்து கிடங்குகள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. 3, 4 மாதங்களுக்கு தேவையான அத்தியவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளன. அரசியல் கட்சியினர் மருந்து கிடங்குகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து கொள்ளலாம். ஏற்கனவே தமிழகத்தில் 32 மருந்துக்கிடங்குகள் உள்ளன.

இந்த ஆண்டு மேலும் தலா ரூ.6 கோடியில் 5 மருந்து கிடங்குகளை கட்ட ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மருந்து வினியோகத்தை சீராக மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

2 மாதத்தில்...

நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை மத்திய மந்திரிகளின் ஆய்வு தமிழகத்தில் தொடரும். கடந்த ஆண்டு தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டது. அந்த கல்லூரிகளின் ஆஸ்பத்திரிகளை 2 மாதத்திற்குள் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் செந்தில், முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story