கொல்லிமலையில்கரடி தாக்கி படுகாயம் அடைந்த 2 பேருக்கு நிவாரண உதவிஅமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
கொல்லிமலையில் கரடி தாக்கி படுகாயம் அடைந்த 2 பேருக்கு நிவாரண உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
கரடி கடித்தது
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு ஊராட்சி கரையங்காட்டுப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் கரடி கடித்ததில் காளிக்கவுண்டர் (வயது 80), பழனிசாமி (51) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் உமா, ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து பழங்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த பழனிசாமிக்கு ரூ.5 ஆயிரமும், காளிக்கவுண்டருக்கு ரூ.30 ஆயிரமும் முதற்கட்ட நிவாரண நிதி உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அப்போது நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
கண்காணிப்பு
பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொல்லிமலையில் கரடியால் மனிதர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் வனத்துறை சார்பில் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் கரடி தென்பட்டால் அதை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கரடியை கூண்டு வைத்து பிடிக்கும் நோக்கம் இல்லை. தொடர்ந்து கரடியால் மக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டால், அதை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கன்னியாகுமரியில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைபட்டால் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
முகாமில் ஆய்வு
முன்னதாக நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாமை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பெண்களிடம் திட்டத்தின் விவரங்களை தெரிவித்த அவர், அதிகாரிகளிடம் முகாம் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.