காஞ்சீபுரத்தில் மினி மாரத்தான் போட்டி
காஞ்சீபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நூற்றாண்டு காணும் பொது சுகாதார துறையை போற்றும் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி காஞ்சீபுரத்தில் நடைபெற்றது.
போட்டியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய வட்டாரங்களில் பொது சுகாதார துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டியானது காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வள்ளல் பச்சையப்பன் தெரு, மூங்கில் மண்டபம், சேக்குப்பேட்டை நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காஞ்சீபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பிரியா ராஜ் பரிசுகளை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.