கொடைக்கானல் மலைச்சாலையில் மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 2 பேர் படுகாயம்


கொடைக்கானல் மலைச்சாலையில் மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 2 பேர் படுகாயம்
x

கொடைக்கானல் மலைச்சாலையில் 60 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேவதானப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம், பூலத்தூரிலிருந்து மதுரைக்கு காய்கறி ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி காய்கறியை இறக்கிவிட்டு இன்று பூலத்தூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. லாரியை திண்டுக்கல் மாவட்டம் கும்பரையூரைச் சேர்ந்த மோகன் (வயது 27 ) என்பவர் ஓட்டி வந்தார்.

அவருடன் லாரியில் அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (27) வந்து கொண்டிருந்தார். லாரி வத்தலகுண்டு- கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறைக்கு கீழே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் மற்றும் வத்தலகுண்டு தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரியில் சிக்கி கொண்ட டிரைவர் மோகன் மற்றும் பாலமுருகன் ஆகியோரை மீட்டனர்.

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இருவரும் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story