செங்குன்றம் அருகே பால் வியாபாரி அடித்துக்கொலை; 4 பேர் கைது
முன்விரோதம் காரணமாக செங்குன்றம் அருகே பால் வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பால் வியாபாரி
செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் முரளி(வயது 26). இவர், பால் வியாபாரம் செய்து வந்தார்.இவருக்கும், அலமாதி சாந்தி நகரைச் சேர்ந்த திலீபன்(25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திலீபன் தனது கூட்டாளிகளுடன் வந்து முரளியை மோட்டார் சைக்கிளில் அலமாதிக்கு கடத்திச்சென்றார். அங்கு அவர்கள் முரளியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கொலை
இதில் பலத்த காயம் அடைந்த முரளியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முரளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து திலீபன் மற்றும் அவரது கூட்டாளிகளான நவீன்(24), தீபன்(41), ஆறுமுகம்(60) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பந்தமாக மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க எடப்பாளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொலையான முரளியின் உறவினர்கள் மற்றும் எடப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்குன்றம் உதவி கமிஷனர் முருகேசன், சோழவரம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.