தனியார் தோட்ட கம்பிவேலியில் சிக்கி மிளா, காட்டுப்பன்றி சாவு


தனியார் தோட்ட கம்பிவேலியில் சிக்கி மிளா, காட்டுப்பன்றி சாவு
x

செண்பகராமன்புதூர் அருகே தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலி சுருக்கு கண்ணியில் சிக்கி மிளா, காட்டுப்பன்றி இறந்தது. இதுபற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

செண்பகராமன்புதூர் அருகே தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலி சுருக்கு கண்ணியில் சிக்கி மிளா, காட்டுப்பன்றி இறந்தது. இதுபற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வனவிலங்குகள்

பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் மிளா, காட்டுப்பன்றி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அவை உணவு தேடி மலை அடிவாரத்தின் அருகே உள்ள தனியார் தோட்டங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்து விடுகின்றன.

அவ்வாறு வரும் விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பதற்காக தோட்டங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளில் சிக்கியும், சாலைகளை கடக்கும்போது வாகனங்கள் மோதியும் இறக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றது.

சுருக்கு கண்ணியில் சிக்கியது

இந்தநிலையில் செண்பகராமன்புதூர் ஆதிச்சன்குளம் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கி ஒரு மிளாவும், காட்டுப்பன்றியும் இறந்து கிடப்பதாக பூதப்பாண்டி வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட வன அதிகாரி இளையராஜா உத்தரவின்பேரில் வன உதவி பாதுகாவலர் சிவகுமார், பூதப்பாண்டி வனச்சரகர் ரவீந்திரன், வனக்காப்பாளர்கள் ரவிச்சந்திரன், அசோக், சிவராமன், முத்துராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அந்த தோட்டத்தை சுற்றி கம்பி வேலியும், அதில் சுருக்கு கண்ணிகள் அமைக்கப்பட்டு இருந்தன. உணவு தேடி வந்த மிளாவும், காட்டுப்பன்றியும் அந்த சுருக்கு கண்ணியில் சிக்கி இறந்து இருப்பதும், அவற்றின் உடல்கள் காய்ந்த நிலையில் கிடப்பதும் தெரியவந்தது. மேலும், அவை இறந்து 3 மாதங்கள் வரை ஆகியிருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணை

இதையடுத்து உடனே கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு இறந்த மிளா, காட்டுப்பன்றியின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story