மிக்ஜம் புயல்: தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ.4,000 ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
3, 449 தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ. 4,000 ஊக்கத்தொகை வழங்கினார்.
சென்னை,
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்ட 3, 449 தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ. 4,000 ஊக்கத்தொகை வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
தமிழ்நாட்டில் 'மிக்ஜம்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வர வழைக்கப்பட்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 22,075 தூய்மைப் பணியாளர்களும், தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மிக்ஜம் புயல் மற்றும் கனமழையின் காரணமாக 46,727.66 மெட்ரிக் டன் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.கனமழையால் ஏற்பட்ட குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றிட தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு பகுதிகளில் 841 தூய்மைப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டன.கடினமான இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றிடும் பணிகளை மேற்கொண்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி ஊக்கத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.அவர்களுக்கு தலா ரூ.4,000 என மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.