100 நாள் வேலைதிட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
100 நாள் திட்ட பணியாளர்களை சொந்த விவசாய வேலையில் ஈடுபடுத்தப்படுவதாக சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை,
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தாருகாபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் பொறுப்பாளராக இருக்கும் 2 பெண்கள், அவர்களது உறவினர் தோட்டத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்களை பராமரிப்பது போன்ற வேலைகளில் 100 நாள் திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்த புகைப்படங்கள், நேரம், இடம் ஆகியவை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறுகையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முறையாக நடைபெறவில்லை. எனவே இந்த வழக்கில் அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலரை சேர்க்க உத்தரவிட்டும் இந்த திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு குறித்தும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.