மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 8-ந் தேதி வரை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் தேவை அதிகரித்ததன் காரணமாக 9-ந் தேதி காலை முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது பாசனத்துக்கு தண்ணீர் தேவை மேலும் அதிகரித்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 113.53 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 672 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.