நந்தனத்தில் மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி திறந்து வைத்தனர்
சென்னை, நந்தனத்தில் மெட்ரோ ரெயில் தலைமை அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் திறந்து வைத்தனர்.
சென்னை,
சென்னை நந்தனத்தில் அண்ணா சாலையில் தேவர் சிலை அருகில் 3.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.365 கோடி செலவில் 12 மாடிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தனர்.
'சென்னை மெட்ரோ ரெயில் தலைமையகம்' என்ற பெயரில் இக்கட்டிடம், 12 மாடிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. இதில் 6 மாடிகள் மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கும், மீதம் உள்ள 6 மாடிகள் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. இதன் அருகிலேயே மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கான குடியிருப்புகளும் உள்ளது.
இந்த பிரமாண்ட கட்டிடம் முன்பு சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் எந்திரம்) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நுழைவு வாயில் பகுதியில் பழங்கால கிணறு தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது. அதில் பெண்கள் தண்ணீர் இறைத்து குடங்களில் எடுத்து செல்வது போன்று காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. அண்ணா சாலை வழியாக செல்லும் பொதுமக்களை இது பெரிதும் கவர்ந்து வருகிறது.
சென்னையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்துக்கு தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை 42 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சராசரியாக தினசரி 2.20 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். 15 பெண்கள் உள்பட 180 பேர் மெட்ரோ ரெயில் டிரைவர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.