ஊட்டச்சத்துக்கள் குறையாத வகையில் காய்கறிகளை சமைக்கும் முறைகள்


ஊட்டச்சத்துக்கள் குறையாத வகையில் காய்கறிகளை சமைக்கும் முறைகள்
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:42 PM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு நாளும் உணவில் குறைந்தப்பட்சம் 350 கிராம் காய்கறிகளும், 150 கிராம் பழங்களும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

திருவாரூர்

ஊட்டச்சத்துக்கள் குறையாத வகையில் காய்கறிகளை சமைக்கும் முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்அறிவியல் நிலைய விஞ்ஞானியும், உணவு-சத்தியியல் இணைப்பேராசிரியர் சோ.கமலசுந்தரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பழங்கள் இடம் பெற வேண்டும்

ஒவ்வொரு நாளும் உணவில் குறைந்தப்பட்சம் 350 கிராம் காய்கறிகளும், 150 கிராம் பழங்களும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பச்சையாகவும் புதிதாகவும் இருந்தால் நல்லது. 350 கிராம் காய்கறிகள், 150 கிராம் அளவு கீரை, 100 கிராம் அளவு கிழங்கு வகைகள், 100 கிராம் இதர காய்கறிகள் என்று சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த காய்கறிகளில் சத்துக்களை பாதுகாக்க நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் 25 கிராம் அளவிற்கு கூடுமானவரை பச்சையாக உண்பது மேல். தினம் தோறும் நமது உணவில் பழங்கள் இடம் பெற வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள்

ஒரு வாழைப்பழம், ஒரு கொய்யா, சீத்தாப்பழம், அன்னாசி, நாவல், சப்போட்டா போன்ற நாட்டுப்பழங்களை தேர்தெடுத்து உண்ண வேண்டும். நெல்லிக்காய் எலுமிச்சை சாறு ஒரு நாளைக்கு 30 மில்லி அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்கள் குறையாத வகையில் காய்கறிகளை சமைக்கும் முறைகள் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். பழங்கள் மற்றும் காய்கறிகளை பறித்தவுடன் அல்லது வாங்கிய அன்றே உபயோகிக்க வேண்டும்.

சத்துக்கள் வீணாகாமல் தவிர்க்கலாம்

பழங்கள் மற்றும் காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பே கழுவ வேண்டும். கழுவும்போது நீண்ட நேரம் நீரில் ஊறவிடக்கூடாது. ஏனெனில் நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் வீணாகிவிடும். காய்கறிகளில் அவைகளின் வெளித்தோல்களை ஒட்டி அதிக அளவில் உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் இருக்கின்றன. எனவே நாம் தோல் நீக்குகையில் கவனமாகச்செய்ய வேண்டும்.

காய்கறிகளைச் சமைக்கும் பொழுது போதுமான அளவு நீரிட்டு சமைக்க வேண்டும். அதிக நீரைப் பயன்படுத்தியபின் அதை வடித்து கீழே ஊற்றக்கூடாது. காய்கறிகளை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது. இந்த முறைகளைப் பின்பற்றினால் சத்துக்கள் வீணாகாமல் தவிர்க்கலாம்.

சமைத்தவுடனே உண்ண வேண்டும். சமைத்த உணவை நெடுநேரம் வைத்தாலும் மற்றும் அடிக்கடி சூடுபடுத்தினாலும் சத்துக்கள் சிதைந்து பயனற்றதாகிவிடும். பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகளை முடிந்தவரை பச்சையாக அல்லது ஆவியில் வேகவைத்து உண்பது நல்லது. இதன் மூலம் உயிர்ச்சத்துக்கள் (குறிப்பாக உயிர்ச்சத்து சி) வீணாவது தடுக்கப்படுகின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story