மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் உடலில் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தீக்காயங்களுடன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை குற்றாலம் தனியார் வைத்தியசாலையில் சித்ரவதை செய்ததாக தந்தை புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தீக்காயங்களுடன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை குற்றாலம் தனியார் வைத்தியசாலையில் சித்ரவதை செய்ததாக தந்தை புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர்நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவருடைய மகன் உமா மகேஸ்வரன் (வயது 37). இவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதால், குற்றாலத்தில் உள்ள தனியார் சித்த வைத்தியசாலையில் அனுமதித்து கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆறுமுகம் தனது மகன் உமா மகேஸ்வரனை பார்ப்பதற்காக அந்த வைத்தியசாலைக்கு சென்றார். அப்போது உமா மகேஸ்வரனின் உடலில் சூடு வைத்ததற்கான தடங்களும், முதுகில் கொப்பளங்களும் இருந்தன.
தந்தை புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் தனது மகனை அங்கிருந்து அழைத்து சென்று, சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் கூறுகையில், ''எனது மகன் உமா மகேஸ்வரனுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதால், குற்றாலம் தனியார் சித்த வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்ைச அளித்து வந்தோம். இதேபோன்று அங்கு 15-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனது மகனின் உடலில் சூடு வைத்ததற்கான தடங்கள் உள்ளன. இதுகுறித்து எனது மகனிடம் கேட்டபோது, தனக்கு சூடு வைத்ததாக கூறுகிறான். அங்கு மனநல பாதிப்பு ஏற்பட்டவர்களை இரும்பு சங்கிலியில் கட்டி போட்டு சித்ரவதை செய்துள்ளனர். கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். எனவே, இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.