காசியில் பாரதிக்கு நினைவு சின்னம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, குமரி அனந்தன் பாராட்டு
காசியில் பாரதி வாழ்ந்த வீட்டை நினைவுச் சின்னமாக்க முடிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதியாரின் தந்தை பஞ்சு அரவை ஆலை நடத்தி கொண்டிருந்த போது, வெள்ளையர்கள் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட செய்தனர். இதனால் மனமொடிந்து கவலையில் மூழ்கி வெகு விரைவில் இறந்து போனார். அப்போது, நெல்லையில் படித்துக் கொண்டிருந்த பாரதி செய்வதறியாது திகைத்தப்போது, காசியில் இருந்த அத்தை குப்பம்மாள் அழைத்துக் கொண்டார்.
அப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கங்கை நதிக்கரையில் அமர்ந்து அதன் எழில் கோலத்தை ரசித்தார் பாரதி. "இன்னரும் நீர்க் கங்கை ஆறு எங்கள் ஆறே" என்று பாடினார்.
"வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்" என்று நதிகள் இணைப்பு பற்றி அன்றே சித்தித்து பாடினார். "கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்" என்று பண்டமாற்று முறையையும் பாடினார்.
பாரதியார் காசியில் வாழ்ந்த போது தான் மீசை வைத்துக் கொண்டார். அந்த மீசை முகத் தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. அந்த காசியில் பாரதி அன்று வாழ்ந்த வீட்டை நினைவுச் சின்னமாக்க முடிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அவரது தந்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் 'இளைய பாரதி' எனப் பாராட்டப்பட்ட நான் தமிழ் நெஞ்சங்களின் சார்பில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.