தமிழகத்தில் ஜூலை மாதம் 10-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் ஜூலை மாதம் 10-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

தமிழகத்தில் ஜூலை மாதம் 10-ம் தேதி 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதி மக்களின் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. அந்த வகையில் சேலம், நாமக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பில் 50 சதவீதம் பேர் சென்னையில் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் 112 தெருக்களில் 3 பேருக்கு மேலும், 25 தெருக்களில் 5 பேருக்கு மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் 2,225 பேர் சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிப்படுத்தி சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் 3 ஆயிரத்து 500 களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.

தற்போது கொரோனா பரவலின் பெரும் பகுதி பிஏ4, பிஏ5 என்ற வகை கரோனாவாக தான் உள்ளது. இவை வேகமாக பரவும் தன்மை உடையது என்பது நிருபணமாகி இருக்கிறது. தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் 10-ம் தேதி 1 லட்சம் இடங்களில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்" என்று அவர் கூறினார்.


Next Story