கழிவுநீர் பிரச்சினையை தீர்க்க மெகா திட்டம்
பரமக்குடியில் பாலன்நகரில் கழிவுநீர் பிரச்சினை தீர்க்க ெமகா திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது என கவுன்சிலர் ஆர்.தனலெட்சுமிராஜு தகவல் தெரிவித்தார்.
பரமக்குடி,
பரமக்குடியில் பாலன்நகரில் கழிவுநீர் பிரச்சினை தீர்க்க ெமகா திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது என கவுன்சிலர் ஆர்.தனலெட்சுமிராஜு தகவல் தெரிவித்தார்.
சாலை வசதி
பரமக்குடி நகராட்சிக்குட்பட்டது 28-வது வார்டு. இது சுந்தராஜ பட்டினம், பாலன்நகர், எழில் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த வார்டின் தி.மு.க. நகர் மன்ற கவுன்சிலராக இருப்பவர் ஆர்.தனலெட்சுமி ராஜு. இவர் மக்களோடு மக்களாக பழகி உள்ளாட்சித்தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றியை பெற்றவர். தனது வார்டின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கவுன்சிலர் தனலெட்சுமி ராஜுகூறியதாவது:-
சுந்தராஜபட்டினத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. பாலன் நகரில் 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மெகா திட்டம்
பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி முயற்சியால் எழில் நகரில் உள்ள 7 தெருக்களில் சுமார் 100 வீடுகளுக்கு புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் எழில் நகரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. பாலன் நகர் சர்ச் அருகில் ரூ.5.35 லட்சம் பொது நிதியில் இருந்து புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. மழைக்காலம் முடிந்த பின்பு அதற்கான பணிகள் தொடங்கப்படும். பாலன் நகரில் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த கழிவுநீர் கால்வாய்களை ஒரே இடத்தில் சேர்த்து அங்கிருந்து கழிவுநீரை அகற்ற மெகா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தொட்டி
பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு உள்ள நகராட்சி இடத்தில் பூங்கா அமைத்து அதில் நடை பாதை அமைத்து அப்பகுதி மக்கள் வாக்கிங் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட உள்ளது. அதேபோல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகிலேயே புதிதாக ரேஷன் கடை கட்டப்பட உள்ளது. பாலன்நகர், பொன்னையாபுரம் பகுதியில் 2 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. ஏதாவது ஒரு நாள் குடிநீர் வரவில்லை என்றால் அப்பகுதியில் மக்கள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. ஆகவே பாலன் நகருக்கு மட்டும் சீரான முறையில் குடிநீர் வரும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் காவிரி குடிநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. எழில் நகரில் உள்ள சாலைகள் முழுவதும் புதிதாக சீரமைக்கப்பட உள்ளது.
எனது வார்டில் நடைபெறும் திட்டப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் நகர்மன்ற தலைவருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.