ராயக்கோட்டையில் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மண்டி அருகே தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மண்டி அருகே தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆலோசகர் நசீர் அகமது, மாவட்ட துணை செயலாளர் வீராசாமி, மாவட்ட பொருளாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் தணிகாசலம், துணை செயலாளர்கள் முனுசாமி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். மாநில தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி கிருஷ்ணகிரியில் உழவர் தின ஊர்வலம், பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில் தமிழக அரசு காட்டு பன்றிகளை சுடவும், அதை உண்பதற்கும் அனுமதிக்க வேண்டும். விவசாய பயிர்களை சேதம் செய்யும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். உயிர் சேதத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். 5-வது சிப்காட் அமைக்க விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ரவி நன்றி கூறினார்.