திட்ட பணிகள் குறித்து முறையான விளக்கம் தர இயலாத நிலை
நகர சபையின் கூட்டத்தின் போது திட்ட பணிகள் குறித்து முறையான விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விருதுநகர் நகர சபையின் அவசர கூட்டத்தின் போது நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் திட்ட பணிகள் மற்றும் மராமத்து பணிகள் குறித்து முறையான விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அவசர கூட்டம்
விருதுநகர் நகர சபையின் அவசர கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தனலட்சுமி, கமிஷனர் தட்சிணாமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் 80 சதவீத தீர்மானங்கள் நகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்ட பணிகள் மற்றும் மராமத்து பணிகள் தொடர்பானவையாக இருந்தன. நகராட்சி கமிஷனர் தட்சிணாமூர்த்தி பொறுப்பேற்று ஒரு சில தினங்களே ஆன நிலையில் பணிகள் தொடர்பாக கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையான விளக்கம் கிடைக்காத நிலை இருந்தது.
இதற்கு பதில் அளித்த தலைவர் மாதவன், நகராட்சி என்ஜினீயர் மணி நெல்லையில் நடைபெறும் துறை ரீதியான கூட்டத்திற்கு சென்று விட்டதால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று பதில் அளித்தார். இதனால் அப்பிரிவில் பணியாற்றும் உதவி என்ஜினீயர் அல்லது பொறுப்புள்ள அலுவலர் யாரேனும் கலந்து கொள்ளாதது ஏற்புடையதல்ல என கவுன்சிலர்கள் முத்துராமன், ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
குப்பைகள்
இதனால் பல தீர்மானங்களுக்கு உரிய விளக்கம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. தெரு விளக்குகள் முறையாக எரியவில்லை என்று கவுன்சிலர் வெங்கடேஷ் புகார் தெரிவித்த நிலையில் எல்.இ.டி. விளக்குகள் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தெருவிளக்கு பராமரிப்பு தொடர்பான கேள்விகளுக்கு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர் கூட்டத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
மேலும் பல தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கவுன்சிலர் செல்வரத்னா புகார் தெரிவித்தார்.
தூய்மை இந்தியா திட்டம்
நகரில் துப்புரவு பணிக்காக பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்கள் தொடர்பாக பல்வேறு விளக்கங்கள் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு தொடர்புடைய அலுவலர்கள் முறையான விளக்கம் அளிக்காத நிலை இருந்தது. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சி உரக்கிடங்கில் உயிர் உரம் தயாரிக்கும் பணிக்காக ரூ. 1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு ரூ. 68 லட்சத்து 80 ஆயிரமும், தமிழக அரசு ரூ. 45 லட்சத்து 40 ஆயிரமும் நகராட்சியின் பங்களிப்பாக ரூ.23 லட்சத்து 39 ஆயிரம் வழங்க நகராட்சி நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ள நிலையில் இத்தொகை நகராட்சியின் பொதுநிதியில் இருந்து செலவினம் செய்ய நகரசபை குழுவின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.
வலியுறுத்தல்
ஏற்கனவே ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை தரம்பிரிக்கும் எந்திரம் பயன்பாடின்றி உள்ள நிலையில் இதே பணிக்காக மேலும் நிதி செலவு செய்துள்ள நிலையிலும் தற்போது நகராட்சி பங்களிப்பாக நிதி ஒதுக்கீடு செய்வது தேவைதானா என கவுன்சிலர்கள் ஜெயக்குமார் மற்றும் மதியழகன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இது நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவின்படி ஒதுக்கீடு செய்ய வேண்டி உள்ளதாக கமிஷனர் தட்சிணாமூர்த்தி பதிலளித்தார்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து தலைவரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.