நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது
நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.
நாமக்கல்:
குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். இதில் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும், பணி காலத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.
மேலும் வீட்டு வாடகைப்படி வழங்கியதில் உள்ள வித்தியாச தொகை வழங்க வேண்டும், மருத்துவ செலவுத்தொகை வழங்க வேண்டும், தர ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்ட ஆணை நகல் வழங்க வேண்டும், விடுப்பில் சென்ற காலத்திற்கு விடுப்பு கால ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஓய்வூதியர்கள் வலியுறுத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டார்.
கலெக்டர் அறிவுறுத்தல்
மேலும் ஓய்வூதியர்கள் அனைவரும் நம்மை போன்று பல்வேறு அரசுத்துறைகளில் நமக்கு முன் பணி செய்தவர்கள் என்பதை கருத்தில் கொண்டு முழு ஈடுபாட்டுடன் இந்த மனுக்கள் மீது விரைவில் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குனர் கமலநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், ஓய்வூதிய இயக்கக முதுநிலை கண்காணிப்பாளர் மதிவாணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சிவசுப்ரமணியன் (பொது), நந்தகுமார் (கணக்குகள்), நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் ஓய்வூதியர்கள், ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.