மீனாட்சி அம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை தொடங்குகிறது- 3-ந் தேதி சுவாமிக்கு முப்பழ அபிஷேகம் நடக்கிறது


மீனாட்சி அம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை தொடங்குகிறது- 3-ந் தேதி சுவாமிக்கு முப்பழ அபிஷேகம் நடக்கிறது
x

மீனாட்சி அம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி சுவாமிக்கு முப்பழ அபிஷேகமும் நடைபெறுகிறது.

மதுரை


மீனாட்சி அம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி சுவாமிக்கு முப்பழ அபிஷேகமும் நடைபெறுகிறது.

ஆனி ஊஞ்சல் திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை(சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. ஆனி மாதம் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் ஈறாக" 9 நாட்கள் என வருகிற 24-ந் தேதி முதல் ஜூலை 2-ந் தேதி முடிய ஊஞ்சல் உற்சவம் நடைபெறவுள்ளது.

திருவிழா நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுவார்கள். அங்கு ஊஞ்சள் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் ஓதப்படும். அதனை நாதசுர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைவார்கள்.

ஆனி உத்திரம்

25-ந் தேதி இரவு முதல் 26-ந் தேதி ஆனி உத்திரம் அன்றைய தினம் அதிகாலையில் 3 மணியளவில் வெள்ளியம்பல நடராஜர் சிவகாமிக்கும், அம்மனுக்கும் சுவாமி கோவில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமியம்மனுக்கு சுவாமி கோவில் 2-ம் பிரகாம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும்.

பின்னர் காலபூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் 4 மாசி வீதிகளில் புறப்பாடாகும். அபிஷேக திரவிய பொருட்களை 25-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம்.

ஆனி முப்பழ அபிஷேகம்

ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் படியாக ஆகமத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த மாதம் 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமியன்று உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாத சிவப்பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெற உள்ளது.

இப்பூஜைகளை ஏற்று கொண்ட இறைவன் இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் புணர்வுறு போகம் எய்த அருள்பாலிப்பதாக ஐதீகமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆனி ஊஞ்சல் உற்சவம் முடிவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

தங்கத்தேர் உலா பதிவு செய்ய இயலாது

திருவிழா நடைபெறும் நாட்களான வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story