மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பணி நிரந்தரம் செய்யக்கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கொளஞ்சி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வி, மாவட்ட பொருளாளர் வேணி ஆகியோர் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஊக்க தொகை ரூ.2 ஆயிரம் அனைவருக்கும் காலதாமதமின்றி கிடைக்க வழிவகை செய்திட வேண்டும். பணி நேரம், பணிகளை வரையறை செய்திட வேண்டும். ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து பணி பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். உழியர்களுக்கு கவுரவமான பணி சூழலை ஏற்படுத்திட வேண்டும். ஆன்லைன் தொடர்பான பணிகளுக்கு செல்போன், பேட்டரி செலவுகளை வழங்கிட வேண்டும். சீருடை, அடையாள அட்டை, ரெயின்கோட், ஸ்டேஷனரி பொருட்கள் வழங்கிட வேண்டும். ஊதியத்தை பிரதி மாதம் 5-ந் தேதிக்குள் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வு துறையும் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story