தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார ஆய்வகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.
அதன்பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களை தேடி மருத்துவம் மூலம் தற்போது வரை ஒரு கோடியே 60 ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் உள்ளன. இதில் எம்.ஆர்.பி. மூலம் 1,021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்களை பணியில் அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணியிடங்களை பொறுத்தவரை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரமே பணியாணை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 14 மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். அந்த மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று சுமுக முடிவு எடுக்கப்பட்டு மருத்துவ காலி பணியிடங்கள் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.