காந்திமதி யானைக்கு மருத்துவ பரிசோதனை
நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் 53 வயதுடைய காந்திமதி என்ற பெண் யானை உள்ளது. இந்த யானைக்கு கொள்ளு, பாசிப்பயறு, கேழ்வரகு, கொண்டைக் கடலை, சாதம், பழங்கள் உள்ளிட்டவை உணவாக வழங்கப்படுகிறது. மேலும் யானைக்கு வழங்கும் உணவுகளில் அவ்வப்போது சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவை கலந்து கொடுக்கப்படுகிறது.
யானையின் உடல்நலனை பரிசோதிக்க 15 நாட்களுக்கு ஒரு முறை ஸ்ரீபுரம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும். அந்த வகையில் நேற்று காந்திமதி யானையை கோவிலில் இருந்து பாகன்கள் ராம்தாஸ், விஜயகுமார் ஆகியோர் ஸ்ரீபுரம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். கால்நடை டாக்டர்கள் யானையை பரிசோதனை செய்தனர்.
பின்னர் அவர்கள் யானை நல்ல உடல் நலத்துடன் உள்ளது என்று கூறி, யானையின் முதுகில் உள்ள புண்ணுக்கு மருந்து கொடுத்தனர். பின்னர் எஸ்.என்.ஹைரோடு வழியாக யானையை மீண்டும் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.