புயல் தாக்கிய பகுதிகளில் தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்


புயல் தாக்கிய பகுதிகளில் தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
x

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 7 தனியார் ஆஸ்பத்திரிகள் நடத்தும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 7 தனியார் ஆஸ்பத்திரிகள் நடத்தும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மிக்ஜம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு 300 நடமாடும் மருத்துவ வாகனங்கள் கொண்ட மருத்துவ குழு அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது நடமாடும் மருத்துவ வாகன குழு மூலம் 357 பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. 7 தனியார் ஆஸ்பத்திரிகளுடன் இணைந்து சைதாப்பேட்டை தொகுதியில் அப்பாவு நகர், பன்னீர்செல்வம் நகர், காரணீசுவரர் கோவில், ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், மடுவங்கரை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் தொடங்கி மாலை 4 மணி வரை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரிடம் நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அ.தி.மு.க. ஆட்சியில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. நாடாளுமன்றமே 2015-ம் ஆண்டு வெள்ளத்தை செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட வெள்ளம் என்று விமர்சித்தது. இந்த அரசைப்பற்றி குறை கூறுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும், ஜெயக்குமாருக்கும் எந்த தார்மீக உரிமையும் இல்லை" என்றார்.


Next Story