சம்பா-தாளடி நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்


சம்பா-தாளடி நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்
x

மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா-தாளடி நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை


மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா-தாளடி நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதனால் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கியது. தற்போது மழை நின்றதால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்து வருகிறது.

மழையில் பாதிக்கப்பட்ட சம்பா-தாளடி நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வயலில் தேங்கிய மழைநீர் வடிந்த பின்பு சம்பா, தாளடி நெற்பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் அளிக்கப்படுகிறது.

ரசாயன உரங்கள்

மேலும் ரசாயன உரங்களில் பேரூட்டச் சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகள் மட்டுமே உள்ளன.ஆனால் நுண்ணூட்டச் சத்துகளை அதிலும் குறிப்பாக சிங் சல்போட் எனப்படும் துத்தநாக சத்தினை பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை.

நெல் விளைச்சலில் துத்தநாக சத்தின் பங்கானது மிகவும் முக்கியமானது ஆகும். நெற்பயிரில் பச்சையம் உருவாவது தொடங்கி பல்வேறு உயிர்வேதி விளைகளில் துத்தநாகம் உதவி புரிகிறது. துத்தநாகம் அளிக்க இயலாத சூழ்நிலையில் விளைச்சலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.அதிக அளவு மணிச்சத்து உரங்களை வயலில் இடுதல், தழைச்சத்து உரமாக தொடர்ந்து யூரியா பயன்படுத்தப்படுவது,

துத்தநாக சத்து

தொடர்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணிலுள்ள துத்தநாகச் சத்தினை பயிர்கள் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பற்றாக்குறையினால் பயிர்கள் வெளிரிய மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கின்றன.

களர் நிலங்கள், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாக சத்து பயிர்களுக்கு கிடைப்பதில்லை.

வளர்ச்சி குன்றி காணப்படும்

இந்த பற்றாக்குறையின் அறிகுறிகள் நெல் நடவு செய்த 2 முதல் 4 வாரங்களுக்குள் தென்படும். பாதிக்கப்பட்ட நெற்பயிரின் இளம் இலைகளின் மைய நரம்பில் வெள்ளை நிறக் கோடுகள் தோன்றும். பின்னர், பழுப்பு நிறக்கோடுகளாக மாறிவிடும். இதனால் பயிர்களின் வளர்ச்சி குன்றிக் காணப்படும். இதுவே மஞ்சள் நோய்போல காட்சியளிக்கும்.

இதை சரிசெய்ய ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சிங் சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும் அல்லது ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும்.

50 சதவீத மானியம்

நெல் நுண்ணூட்ட உரம் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், மயிலாடுதுறை, காளி, வில்லியநல்லூர், மணல்மேடு ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு இருப்புவைக்கப்பட்டு 50 சதவீத மானியத்தில்

வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story