ஆம்புலன்சை மோதவிட்டு மெக்கானிக் கொலையா?


விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற டி.வி. மெக்கானிக் மீது ஆம்புலன்சை மோதவிட்டு கொன்றதாக பரபரப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற டி.வி. மெக்கானிக் மீது ஆம்புலன்சை மோதவிட்டு கொன்றதாக பரபரப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.வி. மெக்கானிக்

விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் காலனி தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 42). டி.வி. மெக்கானிக். இவர் ஆர்.ஆர்.நகருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார். விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் அக்ரஹாரப்பட்டி பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் சங்கரலிங்கம் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து சங்கரலிங்கத்தின் மனைவி உமா முருகேசுவரி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வாகன விபத்து வழக்குப்பதிவு செய்து மோதிய வாகனத்தை தேடி வந்தனர்.

ஆம்புலன்ஸ் மோதியது

அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது மோதிய வாகனம் ஆம்புலன்ஸ் என்றும், பட்டம்புதூர் விலக்கை தாண்டி கலெக்டர் அலுவலகம் வரை சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மோதிய ஆம்புலன்சை ஓட்டிச்சென்றவர் பட்டம்புதூரைஅடுத்துள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த முருகன் (31) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து முருகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சங்கரலிங்கத்தின் மனைவி உமா முருகேசுவரி தனது கணவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மேற்கண்ட முருகன் ஆம்புலன்ஸ் வாகனத்தை மோதி திட்டமிட்டு உயிரிழக்க செய்ததாகவும், அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த சிலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அரசு ஆஸ்பத்திரி முற்றுகை

மேலும் உமா முருகேசுவரியும், அவரது உறவினர்களும் சங்கரலிங்கத்தின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஆஸ்பத்திரியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார், முருகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் உமா முருகேசுவரியின் குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியதின் அடிப்படையில் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சங்கரலிங்கத்தின் உடலை பரிசோதனைக்கு பின் அவர் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக முருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாகவும் தெரிவித்தார். வாகன விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தீவிர விசாரணைக்கு பின் இதுபற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்தநிலையில் முருகனுக்கும், சங்கரலிங்கத்திற்கும் இடையில் டி.வி. பழுது பார்க்க கொடுத்ததில் ஏற்கனவே பிரச்சினை இருந்ததாகவும் கூறப்படுகிறது.



Related Tags :
Next Story