புதர் சூழ்ந்த குட்டையில் இறைச்சி கழிவுகள்
கிணத்துக்கடவில் புதர் சூழ்ந்த குட்டையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் புதர் சூழ்ந்த குட்டையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மாமாங்கம் குட்டை
கிணத்துக்கடவு பகுதியில் மாமாங்கம் குட்டை உள்ளது. இந்த குட்டையில் கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீரானது, சொலவம்பாளையம் வழியாக பாய்ந்தோடி வருவது வழக்கம். இங்கு தேங்கும் தண்ணீர் பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர மழை பெய்யவில்லை. இதன் காரணமாக குட்டையில் நீர் இருப்பு குறைந்துவிட்டது. மேலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து குட்டையை ஆக்கிரமித்து உள்ளது. இதனால் குட்டையில் போதிய அளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தூர்வார வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள மாமாங்கம் குட்டையில் இறைச்சி கழிவுகளையும், குப்பைகளையும் இரவு நேரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவதி அடைந்து வருகிறோம். மேலும் புதர் செடிகளில் ஆக்கிரமிப்பில் குட்டை உள்ளது. தென்மேற்கு பருவமழை விரைவில் தீவிரம் அடைய உள்ளது. அப்போது குட்டையில் போதிய அளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் நீர்வழித்தடம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குட்டையை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.