விவசாயிகளுக்கு மிளகாய் விதை, தென்னை நாற்றுக்கள் கிடைக்க நடவடிக்கை
மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிளகாய் விதை, தென்னை நாற்றுக்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் விஜயமுருகன் கூறுகையில், தமிழக அரசு விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களையும் மிளகாய் மண்டலமாக அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு விவசாயிகளுக்கு மிளகாய் நாற்றுக்கள், மிளகாய் விதைகள், தென்னை நாற்றுக்கள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
விருதுநகர் தென்னைவாரியம் விவசாயிகளுக்கு மரம் ஏறுதல், தேங்காய் பறித்தல், தேங்காய் உரித்தல் ஆகியவற்றிற்கான பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி கூறினார்.
தமிழக விவசாய சங்க தலைவர் ராமச்சந்திரன் ராஜா கூறுகையில், காட்டு மாடுகள், யானைகள் மூலம் பயிர்சேதம் ஏற்படும் போது உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டுறவு சங்கங்களின் மூலம் யூரியா தட்டுப்பாடு இல்லாமல் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். பயிர்களுக்கும், விவசாயிகளுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் நாய்கள் மற்றும் மாடுகள் மூலம் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி முருகன் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் கோவில் ராஜா மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.