சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு


சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
x

கோப்புப்படம் 

தெருநாய் பிரச்சினைகளில் இருந்து மக்களை காக்கும் பணியை அரசு மேற்கொள்ளும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் கூறியதாவது:-

சென்னையில் வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது சென்னையில் உள்ள 200 வார்டுகளில் சராசரியாக ஒரு வார்டில் 40,000 பேர் கூடுதலாக வசிக்கின்றனர். வார்டுகள் எண்ணிக்கையை அதிகரித்து மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்பட உள்ளது. தற்போது 138 நகராட்சிகள் உள்ள நிலையில் 159 ஆக உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் அடுத்த 20 நாட்களில் மேலும் 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3,000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

சென்னை நகரை அழகுப்படுத்தும் வகையில் பெசன்ட் நகரில் ஆரோக்கிய நடைபாதை அமைக்கப்பட்டது. ஆரோக்கிய நடைபாதைக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மேலும் சில இடங்களில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எம்.கே.பி நகர், ஆர்.ஏ புரம், நங்கநல்லூர், திரு.வி.க. பாலம் உள்ளிட்ட மேலும் சில இடங்களில் ஆரோக்கிய நடைபாதை அமைக்கப்படும். சென்னையில் 15 கோடியில் நீர் தங்கும் பூங்கா அமைக்கப்படும். நகர்ப்புறங்களில் மழைநீர் சேமிக்க ஏதுவாக 50 பூங்காக்களில் நீர் தங்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும். சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்.

தெருநாய் பிரச்சினைகளில் இருந்து மக்களை காக்கும் பணியை அரசு மேற்கொள்ளும். கொரோனா காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். நாய்களுக்கு கருத்தடை செய்து பெருகாமல் பார்த்துக் கொள்ளும் பணி நடந்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீதிகளில் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் ரூ.5 ஆயிரமும், 2-வது முறை பிடிபட்டால் ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் 3-வது முறை பிடிபட்டால் மாடுகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story