மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க அளவீடு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க அளவீடு முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க அளவீடு முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அளவீடு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் அலிம்கோ சார்பில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் மூன்று சக்கர வண்டிகள், மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள் மற்றும் நடை பழகு உபகரணம், காதுக்கு பின் அணியும் காதொலி கருவி, பிரெய்லி கை கடிகாரம், புற உலக சிந்தனையற்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உபகரணங்கள், தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான ஏ.டி.எல். கிட், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி சிலேட், கிட் அண்ட் கேன், நவீன மடக்கு ஊன்று கோல், காலிப்பர் (உதவி உபகரணம்), செயற்கை கை, கால் போன்ற உதவி உபகரணங்கள் அளவீடு செய்து வழங்கவுள்ளனர்.
மேற்காணும் உதவி உபகரணங்களை இன்று(வியாழக்கிழமை) சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நாளை (வெள்ளிக்கிழமை) கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அளவீடு முகாம் நடைபெறவுள்ளது.
அசல் ஆவணங்களுடன்..
40 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது வசிப்பிடத்திற்குட்பட்ட மேற்படி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முகாம் நடைபெறும் நாளன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மாத வருமான சான்று, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதற்கான அட்டை ஆகியவைகளின் அசல் ஆவணம் மற்றும் அதன் நகல்கள் ஒன்று, புகைப்படம்-2 ஆகியவைகளுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 13, செட்டிகுள சந்து, 5-வது புது தெரு, மயிலாடுதுறை. தொலைபேசி 04364-212730 தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.