'மக்களை தேடி மேயர்' திட்டம்: சென்னை மாநகராட்சி 6-வது மண்டலத்தில் மக்கள் குறைகளை கேட்ட மேயர் பிரியா


மக்களை தேடி மேயர் திட்டம்: சென்னை மாநகராட்சி 6-வது மண்டலத்தில் மக்கள் குறைகளை கேட்ட மேயர் பிரியா
x

‘மக்களை தேடி மேயர்’ திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி 6-வது மண்டலத்தில் மக்கள் குறைகளை மேயர் ஆர்.பிரியா கேட்டறிந்தார்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், 2023-24-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் பொது மக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில் 'மக்களை தேடி மேயர்' என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, கடந்த 3-ந்தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, 5-வது மண்டலத்துக்குட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், சென்னை மாநகராட்சி 6-வது மண்டலத்துக்குட்பட்ட பொதுமக்களிடம், திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் மேயர் ஆர்.பிரியா குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.

அந்த வகையில் சாலை வசதி, பள்ளிக்கூடத்தில் கட்டிட வசதி, சமுதாயக்கூடம் மேம்பாடு, மழைநீர் வடிகால் வசதி, குடியிருப்பு வசதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 239 கோரிக்கை மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டு இருந்தன.

அதில் பிறப்பு சான்றிதழ் தொடர்பான 4 மனுக்கள், சொத்து வரி பெயர் மாற்றம் குறித்த 2 மனுக்கள் என மொத்தம் 6 மனுக்கள் மீது மேயர் ஆர்.பிரியா உடனடி நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழை வழங்கினார்.

இதையொட்டி, சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு, பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது. முன்னதாக சிறப்பு முகாமில் 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், 2 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ்கள், 5 பயனாளிகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்கள், ஒரு பயனாளிக்கு வருமான சான்றிதழ், ஒரு பயனாளிக்கு சாதி சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தாயகம் கவி எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story