பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு 15 முதல் 20 ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலை அமைப்பதற்காக செலவிட்ட மொத்த தொகையை ஈட்டிய பிறகும் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.
மத்திய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அதை ஏற்க மறுக்கிறது என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்களின் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் தன்ராஜ், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன், இந்திய ரியல் எஸ்டேட் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காலாவதியான சுங்கச்சாவடிகளில்
இதனை தொடர்ந்து பேசிய மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ்:-
60 கிலோ மீட்டருக்கு இடையில் இருக்கும் சுங்கச் சாவடிகளை ஏற்க மாட்டோம் என்றும், இது மிக பெரிய விதி மீறல் என்றும் தமிழ்நாட்டை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் எந்தவித மாறுதலும் காணப்படாதது மன வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருக்கக்கூடிய அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றிடுவோம் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி அறிக்கையளித்தார். இருப்பினும் மாற்றம் ஏற்படாதது ஓட்டுமொத்த வாகன உரிமையாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஏமாற்றத்தையே அளித்தது.
இதனோடு இல்லாமல் காலாவதியான சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக்காக 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற நெடுஞ்சாலைத்துறை அரசாணை தற்போது வரை நடைமுறை படுத்தப்படவில்லை.
55 சதவீதம் விபத்துகள்
தமிழ்நாட்டில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் 55 சதவீதம் விபத்துக்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. ஆகவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி சுங்கச்சாவடிகளை கண்காணிக்க தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் பொன் குமார் பேசுகையில்:-
கவர்னர் என்பவர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான தூதுவர். மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசிடம் உள்ளது. அதனை கவர்னர் மத்திய அரசிடம் பேசி இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அதை விட்டு விட்டு தமிழ்நாட்டுக்கு தமிழகம் என்று பெயர் வைக்க வேண்டும், இலக்கியம் சரியில்லை என்று பேசக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் சிங்கப்பெருமாள் கோவில் மோட்டார் வாகன பழுதுபாரப்்போர் நலச்சங்க செயலாளர் சீனு என்ற சிவனேசன், மகேந்திரா சிட்டி லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் ஜெகதீசன், டி.கே.ஜி. டில்லிபாபு, சையத், வெங்கடேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.