பொதும்பு பகுதிகளில் முகமூடி கொள்ளை கும்பல் அட்டகாசம்- விடிய, விடிய உருட்டு கட்டைகளுடன் சுற்றிய பொதுமக்கள்
பொதும்பு பகுதிகளில் முகமூடி கொள்ளை கும்பல் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் விடிய, விடிய உருட்டு கட்டைகளுடன் சுற்றி திரிகின்றனர்.
பொதும்பு பகுதிகளில் முகமூடி கொள்ளை கும்பல் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் விடிய, விடிய உருட்டு கட்டைகளுடன் சுற்றி திரிகின்றனர்.
முகமூடி கும்பல்
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான சிக்கந்தர்சாவடியை அடுத்த பொதும்பு, சங்கையா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மாநகரை ஒட்டிய விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியாக மாறிவருவதால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் மாநகர் பகுதியில் இருந்து புது வீடுகளை கட்டி அந்த பகுதிக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதிகளில் முகமூடி கொள்ளை கும்பல் தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2 வாரத்தில் 7-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
முகத்தை முழுவதுமாக மறைத்து கொண்டு உடலில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு டவுசர் அணிந்து வரக்கூடிய முகமூடி கொள்ளை கும்பல் ஒவ்வொரு பகுதிகளிலும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடித்து செல்வதோடு வீடுகளில் ஆட்கள் இருந்தால் அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உருட்டு கட்டையுடன்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொதும்பு ஏ.ஆர். சிட்டி, சங்கையா நகர் பகுதியில் இந்த கும்பல் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை விரட்டி பிடிக்க முயன்ற போது வயல்வெளி வழியாக தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அந்த கும்பலை தேடி இரவு முழுவதிலும் தூங்காமல் உருட்டு கட்டையுடன் சுற்றி திரிந்தனர்.
தொடர்ச்சியாக அப்பகுதிகளில் முகமூடி கொள்ளை கும்பல் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிக்கந்தர்சாவடியை சுற்றியுள்ள பகுதிகளில் முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியான நிலையில் தற்போது பொதும்பு பகுதியிலும் முகமூடி கும்பல் கொள்ளையில் ஈடுபடும் சி.சி.டி.வி. காட்சியானது வெளியாகியுள்ளது.
எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு முகமூடி கொள்ளை கும்பலை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.