மாசித்திருவிழா கோலாகலம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை தேரோட்டம்..!


மாசித்திருவிழா கோலாகலம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை தேரோட்டம்..!
x

மாசித்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் ஒவ்வொரு நாளும் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சமய சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதுதல், பரத நாட்டியம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

8-ம் திருவிழாவான நேற்று பகல் 1.45 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவிலில் சேர்தல் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மீன லக்னத்தில் தேரோட்டம் நடக்கிறது. மாசி திருவிழா தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

11-ம் திருவிழாவான நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7 மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல் நடக்கிறது. அங்கு 10.30 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story