பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருந்திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது


பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருந்திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரம்பலூர்

பிரம்மபுரீஸ்வரர் கோவில்

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் அனுக்கை, விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி நிகழ்ச்சியும், நேற்று கொடியேற்றமும் நடந்தது.

இதனைதொடர்ந்து சுவாமி-அம்பாள் உற்சவர் சிலைகள் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓத, சோடஷ பூஜைகளும், நெய்தீபம் மற்றும் கற்பூர தீபாராதனையும் நடந்தது.

கொடியேற்றம்

அதனைத்தொடர்ந்து சுவாமி-அம்பாள் சிலைகள் கொடிமரம் முன்பாக பல்லக்கில் நிறுத்தி வைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இரவில் அம்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவகாமம் கலியபெருமாள், மதனகோபாலசுவாமி கோவில் பரம்பரை ஸ்தானிகம் பொன்.நாராயணஅய்யர், முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கல்யாண உற்சவம்

இன்று (திங்கட்கிழமை) 2-ம் திருவிழா இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும், நாளை (செவ்வாய்க்கிழமை) 3-ம் திருவிழா சேஷவாகனம், மார்ச் 1-ந் தேதி சூரியபிரபை வாகனம், சந்திரபிரபை வாகனம், 2-ந்தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 3-ந் தேதி யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. 4-ந்தேதி மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம், இரவு புஷ்பக விமானத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

5-ந்தேதி கைலாச வாகனம், 6-ந்தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக காலை 6 மணி முதல் 7 மணி வரை ரதா ரோஹணம் நிகழ்ச்சி நடக்கிறது.

ஊஞ்சல் உற்சவம்

7-ந்தேதி கொடியிறக்கம் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 8-ந்தேதி ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது. 9-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 10-ந்தேதி மஞ்சள் நீர் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. 13-ந்தேதி திருத்தேர் 8-ம் திருவிழா விமரிசையாக நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் அரியலூர் உதவி ஆணையரான லட்சுமணன், கோவில் செயல் அலுவலர் ராஜதிலகம் மற்றும் கோவில் திருப்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story