'நமது அம்மா' ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகல்!
நமது அம்மா நாளிதழில் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்!வெறுப்பில் பதவியை தூக்கி எறிந்த மருது அழகுராஜ்
சென்னை
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா டிவி சசிகலாவின் கைக்கு சென்றதால், புதிதாக கடந்த 2018 ஆம் ஆண்டு நமது அம்மா மற்றும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தொடங்கினர். இதனையடுத்து நமது அம்மா நாளிதழ் நிறுவனர்களாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பெயர் இருந்து வந்தது.
இந்தநிலையில் தற்போது ஏற்பட்ட பிரச்சனையால் நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பெயரில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் பெயர் நீக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் பெயர் முதல் கட்டமாக நாளிதழில் இருந்து நீக்கப்பட்டதாகவும், விரைவில் அ.தி.மு.க.வில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்பட்டது.
இந்தநிலையில் நமது அம்மா பத்திரிக்கை தொடங்கியதில் இருந்து ஆசிரியராக செயல்பட்டு வந்த மருது அழகு ராஜ் இன்று தனது பதவியில் இருந்து விலகுவதாக டுவிட்டர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் நதிகாக்கும் இரு கரைகள் என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இவர் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மருது அழகுராஜ் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக அறியப்பட்டவர்.