புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில் ரூ.20½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை


புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி  தர்மபுரி உழவர் சந்தையில் ரூ.20½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில்ரூ.20½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

தர்மபுரி

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில் ரூ.20½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.

காய்கறிகள் விற்பனை

புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவார்கள். பின்னர் பல்வேறு காய்கறிகளுடன் செய்யப்பட்ட உணவை குடும்பத்துடன் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்வர். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெறும். அதன்படி தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி காய்கறிகள் விற்பனை விறுவிறுப்பாகநடந்தது.

அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகளும், பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வர தொடங்கினர். நேற்று ஒரே நாளில் இங்கிலீஷ் காய்கறிகள் (மலைக்காய்கறிகள்) 8 டன் மற்றும் நாட்டு காய்கறிகள் 42 டன் என மொத்தம் 50 டன் காய்கறிகள் விற்பனையானது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். இதேபோல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 3,320 கிலோ வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களும் விற்பனையானது. மேலும் ரூ.50 ஆயிரத்துக்கு வாழை இலை மற்றும் பூக்கள் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

142 விவசாயிகள்

தர்மபுரி உழவர் சந்தைக்கு நேற்று 142 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சுமார் 10 ஆயிரம் பேர் காய்கறிகள் வாங்க வந்தனர். வழக்கமாக தர்மபுரி உழவர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 25 டன் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் 2 மடங்கு காய்கறிகள் விற்பனை ஆனது. அடுத்த வாரம் 4-வது சனிக்கிழமை என்பதால் கூடுதலாக பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், மஞ்சுநாதேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

போக்குவரத்து மாற்றம்

உழவர் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்ததால் தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி வந்த அனைத்து வாகனங்களும் சந்தைப்பேட்டை வழியாக திருப்பி விடப்பட்டன.


Next Story