சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x

திருமங்கலம் விரிவாக்க பகுதியில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் விரிவாக்க பகுதியில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதி

திருமங்கலம் பகுதியில் மறவன்குளம் மற்றும் வடகரை ஊராட்சி விரிவாக்க பகுதிகளாக உள்ளன. இப்பகுதிகளில் மதுரா சிட்டி, முத்தமிழ்நகர், பிரபாகரன்நகர், கலைநகர் உள்ளிட்ட பகுதிகள் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன. இங்கு சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்த விரிவாக்க பகுதி உருவாகி 20 ஆண்டு களாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதிகள், மின்விளக்கு வசதிகள், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் தற்போது வரை செய்து தரப்படவில்லை.

புகார்

இந்தபகுதியில் பாதி திருமங்கலம் விரிவாக்க பகுதியும் மீதி மறவன்குளம் மற்றும் வடகரை விரிவாக்க பகுதியாக இருப்பதால் நகராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் சாலை அமைக்கவில்லை. ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இருந்தும் சாலை அமைக்கப்படவில்லை. இந்த பகுதி சாலை இல்லாமல் மழை காலங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குளம்போல் காட்சி அளிப்பதாக இந்த பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று குண்டும் குழியுமான சாலைகளில் நாற்று நடும் போராட்டத்தில் இப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நடவடிக்கை

தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். வடகரை பஞ்சாயத்து தலைவர் தற்காலிகமாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story