கறம்பக்குடி பகுதியில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்


கறம்பக்குடி பகுதியில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்
x

கறம்பக்குடி பகுதியில் சாமந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

பூக்கள் சாகுபடி

கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளில் 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மற்ற ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. மழைக்காலங்களில் ஏரி, குளங்கள் நிரம்புவதால் கிடைக்கும் தண்ணீர் மூலமும், ஆழ்குழாய் பாசனம் வாயிலாகவும் மட்டுமே இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் நெல், கரும்பு, வாழை, கடலை உள்ளிட்ட விவசாயம் அதிகளவில் நடைபெற்று வரும்நிலையில், பூக்கள் சாகுபடியிலும் கறம்பக்குடி பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் வேதனை

அதன்படி கறம்பக்குடி, சுக்கிரன் விடுதி, குழந்திரான்பட்டு, திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, மழையூர், அம்புக்கோவில், ரெகுநாதபுரம், சூரக்காடு, தென்னகர், மஞ்சுவிடுதி, பட்டத்திகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிக அளவில் சாமந்தி பூ சாகுபடி செய்யப்படுகிறது. தண்ணீர் அதிகம் தேவைப்படாத நிலையில் குறைந்த செலவில் 30 நாட்களில் பலன் தரக்கூடியது என்பதால் சாமந்தி பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சாமந்தி செடிகளில் தற்போது பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. தினமும் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை சாமந்தி பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது சாமந்தி பூக்கள் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே விற்பனையாகிறது. விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இடைத்தரகர்கள்

இதுகுறித்து சுக்கிரன் விடுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒட்டு ரக செடிகளை சாகுபடி செய்து 30 நாட்களில் பலன் தரும் என்பதால் அதிகளவில் சாமந்தி சாகுபடி செய்துள்ளோம். 3 மாதங்களில் 6 முதல் 8 முறைகள் வரை அறுவடை செய்வோம். சில நேரங்களில் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாகும். அப்போது எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையாவதால் நஷ்டம் அடைந்துள்ளோம்.

மேலும், வியாபாரிகள் எங்களிடம் மிகக்குறைந்த விலைக்கு வாங்கி சென்று அதிக விலைக்கு விற்கின்றனர். பூக்கள் விற்பனையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story