மாரத்தான் ஓட்டம்
மணப்பாறையில் மாரத்தான் ஓட்டம் நடந்தது.
மணப்பாறை:
மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு 'மணவை மாரத்தான்' என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கு 21 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே 5 மற்றும் 3 கிலோ மீட்டர் தூரமும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தானை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், டாக்டர் கலையரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாரத்தானில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்றனர்.
இதில் 21 கிலோ மீட்டர் தூர ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில்குமாரும், 10 கிலோ மீட்டர் தூர பெண்கள் பிரிவில் மணப்பாறையை சேர்ந்த யுகாவும், 5 கிலோ மீட்டர் தூர ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சியை சேர்ந்த கனிராஜாவும், பெண்கள் பிரிவில் மணப்பாறையை சேர்ந்த கனிஷ்காவும், 3 கிலோ மீட்டர் தூர ஆண்கள் பிரிவில் நத்தம் பகுதியை சேர்ந்த ராம்பிரதியும், பெண்கள் பிரிவில் சாதனா பாரதியும் முதலிடம் பிடித்தனர்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு 500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் பலர் கலந்து கொண்டு ஓடினர். மேலும் மாரத்தானில் போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், குழுவினருடன் பங்கேற்று 21 கிலோ மீட்டர் ஓடி நிறைவு செய்தார். பரிசளிப்பு விழாவின்போது மேடையில் ஆணழகன்கள் அணிவகுத்து, கட்டுடல் திறனை வெளிப்படுத்தினர்.