மாரத்தான் ஓட்டம்
கோவில்பட்டியில் மாரத்தான் ஓட்டம்
கோவில்பட்டி:
கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் ராஜீவ்காந்தி விளையாட்டு கழகம் சார்பாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. போட்டியின் தூரம் 10 கிலோ மீட்டர். கயத்தாறு யூனியன் தலைவரும், தூத்துக்குடி மாவட்ட தடகள சங்க தலைவருமான எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா தொடங்கி வைத்தார்.
ஆண்கள் பிரிவில் முதலிடத்தை திருவள்ளூர் ஜெயா மெட்ரிக் பள்ளி மாணவன் லிங்ககுமாரும், 2-வது இடத்தை வடக்கன்குளம் தெரேசா பள்ளி மாணவன் இம்மானுவேலும், 3-வது இடத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவன் முகேஷ் பெற்றனர். பெண்கள் பிரிவில் முதல் இடத்தை புதூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி கோகிலாவும், 2-வது இடத்தை புதூர் இந்துநாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கீதா, 3-வது இடத்தை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா முதல் பரிசாக ரூ.5000, 2-வது பரிசாக ரூ. 3,000, 3-வது பரிசாக ரூ.2,000 வழங்கினார். 4 முதல் 10 வரை இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.500 வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராஜீவ்காந்தி விளையாட்டு கழக செயலாளர் குருசித்திர சண்முகபாரதி வரவேற்று பேசினார். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கே.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சுதாகர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெய முருகன் நன்றி கூறினார்.