சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டம்


சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டம்
x

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

கரூர்

காகிதபுரம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பசுமை ஓட்டம் என்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் மரம் நடும் விழா ஆகியவை நடைபெற்றது. மாரத்தான் ஓட்டப்பந்தயம் காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் தொடங்கி காந்திநகர், நொய்யல் பிரிவு சாலை, வேலாயுதம்பாளையம் ரவுண்டானா சென்று திரும்பும் வகையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் மொத்தம் 432 பேர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரத்து 500, 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு ஆறுதல் பரிசாக 100 பேருக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு காகித ஆலை நிறுவனம் சார்பில் நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட சுற்றுசூழலுக்கு ஏற்ற டி-சர்ட் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள், சிற்றுண்டி, தேநீர், எலுமிச்சை சாறு, குளுக்கோஸ் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், காகித ஆலை நிறுவனத்தின் தலைமை விழிப்புணர்வு அதிகாரி பண்டி கங்காதர், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், கரூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற கையேட்டினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வெளியிட உதவி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயக்குமார் பெற்று கொண்டார். தொடர்ந்து காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.இதில் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (வனத்தோட்டம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) மற்றும் நிலைத்தன்மை அதிகாரி சீனிவாசன், முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு) வரதராஜன் உள்பட காகித ஆலை வனத்தோட்டத்துறை மற்றும் மனித வளத்துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காகித ஆலை நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் (வனம்) ஜெயக்குமார் நன்றி கூறினார்.


Next Story