மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி


மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி
x

தர்மபுரியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கான மாரத்தான் போட்டியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி

மாரத்தான் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் தர்மபுரியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அரசு கலைக் கல்லூரியில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இந்த போட்டிகள் நடைபெற்றது. 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, தேவரசம்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, அதியமான் கோட்டம் வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும் போட்டிகள் நடைபெற்றது. இதேபோன்று 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, ஒட்டப்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பரிசு, சான்றிதழ்

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, உதவி கலெக்டர் கீதா ராணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நலஅலுவலர் பவித்ரா, மணி, ஒன்றிய கவுன்சிலர் சோனியா வெங்கடேசன், அரசு கலைக்கல்லூரி விளையாட்டு அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story