பொன்னேரியை ஆழப்படுத்த வலியுறுத்தி மாரத்தான் போட்டி


பொன்னேரியை ஆழப்படுத்த வலியுறுத்தி மாரத்தான் போட்டி
x

பொன்னேரியை ஆழப்படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஜனவரி மாதம் 6-ந்தேதி மாரத்தான் போட்டி நடத்துவது என பொன்னேரி மீட்பு குழு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர்

பொன்னேரி

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது. 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது இந்த ஏரி தூர்வாரப்படாமல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொன்னேரியை ஆழப்படுத்தவும், ஆக்கிரமிப்பை அகற்றவும், போதிய நீரினை தேக்கி விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

ராஜேந்திர சோழனுக்கு சிலை

இந்தநிலையில் சோழகங்கம் பொன்னேரி மீட்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் பொன்னேரி கரை பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் முல்லைநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ் மையம் அமைப்பின் இயக்குனரும், கத்தோலிக்க பாதிரியாருமான ஜகத் காஸ்பர் கலந்துகொண்டு பேசுகையில், உலக வரலாற்றில் கங்கைகொண்ட சோழபுரம் வரலாற்று சிறப்புகளைக் கொண்டது. மாமன்னன் ராஜேந்திர சோழன் புகழ் உலகெங்கிலும் பரவி கிடக்கிறது. அவரால் வெட்டப்பட்ட பொன்னேரியை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் 150 அடி உயரத்தில் சிலை அமைக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து, பொன்னேரியை ஆழப்படுத்துவது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஜனவரி மாதம் 6-ந்தேதி மாரத்தான் போட்டி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பா.ம.க.வினர் எதிர்ப்பு

பொன்னேரியில் நடந்த இந்த கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையறிந்த பா.ம.க.வினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடத்திய கூட்டத்திற்கு பல்வேறு அனுமதிகளை பெற்று நடத்தினோம். அதுபோல் இந்த கூட்டத்திற்கு அனுமதி பெறாமல் கூட்டம் நடத்த போலீசார் எப்படி அனுமதிக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து போலீசார் கூட்டத்தை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினர்.

இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொன்னேரி மீட்பு குழுவினரும், பா.ம.க.வினரும் போராட்டம் நடத்த ஆயத்தமாகினர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அமைதி ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு வழியாக கூட்டம் முடிந்தது. இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story