கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி


கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி
x

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

அரியலூர்

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் தொடங்கிய மாரத்தானை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகே சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தை சென்றடைந்தது. மாரத்தானில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். மேலும் கலெக்டர் எச்.ஐ.வி. எய்ட்ஸ் பரவும் முறைகள், தடுக்கும் முறைகள் குறித்த தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளையும் வாகனங்களில் ஒட்டினர். மாரத்தானில் முதலிடம் பிடித்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. இதேபோன்று ஆறுதல் பரிசாக மாணவிகள் பிரிவில் 4 பேருக்கும், மாணவர்கள் பிரிவில் 3 பேருக்கும் தலா ரூ.1,000-ம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், பொது சுகாதார துணை இயக்குனர் டாக்டர் அஜிதா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story